இதயத்தில் பூத்திருக்கும் என் அன்பு ஆசானே,
இந்நாள் நான் மறவேன் என்றும்
வருடம் முழுவதுமே வழிப்படுத்தி வந்த உங்களை
வாழ்த்திடக் கிடைத்தநாள் இதுவன்றோ
ஆதலால் நான் மறவேன் இந்நாளை.
நிதமும் உன் செயலை நிதர்சனமாய் பார்ப்பவன் நான்
இதமாகப் பழகுவதில் இணையில்லை உந்தனுக்கு
மற்றவரின் மனம் நோக மறந்தேனும் கதைத்ததில்லை
கற்றவன் நான் எனும் கர்வமும் உமக்கில்லை.
வந்திடுவீர் வேளைக்கு வகுப்பறையில் எங்களுக்குத்
தந்திடுவீர் சிறுபணிகள் தகைமைகளைத் தானுயர்த்த
நொந்திடுவீர் பிள்ளைகளின் ஞொள்கும் நிலைகண்டு
முந்திடுவீர் அன்புமழை முழுதும் பொழிந்திடவே.
கற்பிக்கும் நேரத்தில் கைப்பேசியில் கதைத்து
எப்போதாவது நீங்கள் இருந்ததில்லை மேலும்
தப்பாக அழைப்பு மணி அடித்தாலும் கூட
அப்புறமாகவேதான் அதற்குப் பதிலளிப்பீர.;
கற்றிடும் மாணவரைக் கடிந்ததில்லை ஒருபோதும்
பெற்றிடும் புள்ளி கண்டு பிரத்தியேகமாய்ப் புகட்டி
மற்றநல் மாணாக்கர்போல் மாற்றியே எங்கள் நெஞ்சில்
நற்றடம் பதிக்கும் எங்கள் நல்லாசான் நீங்களன்றோ!
பாடவிதானம் தாண்டி பள்ளியில் உள்ள இணைப்
பாடவிதானத்திலும் பங்குறும் பண்பாளனே
தேடரும் பொக்கிஷமாய் திகழ்கின்ற உன்னை இந்
நாடே புகழும் ஐயா நற்றமிழால் வாழ்த்துமையா
பள்ளிக்கு வந்தபின்பு பால்க் கணக்கு வயல்க் கணக்கு
கள்ளியந்தீவில் உள்ள கைமரக் கடைக்கணக்கு
பார்க்கும் பழக்கமிலாப்பண்பு நிறை ஆசானே
பார்போற்ற உங்கள்பணி பரவட்டும் எல்லோர்க்கும்.
எங்களின் வாழ்வுயர ஏணியாய் அமைந்தவர் நீர்
பங்கமிலாக் கல்விதனை பாசமுடன் தந்தவர் நீர்
உங்களின் புகழ் இந்த உலகமெலாம் ஓங்குமென
மங்கலமாய் வாழ்த்துகின்றோம் மாசற்ற ஆசானே
ஆசிரியர் தினத்தில் ஆசானை வாழ்த்துகின்றோம்.
2015.10.06
எஸ்.பி. நாதன்