திடசங்கற்பம்
















கொஞ்சம் பொறுத்திரு தோழா
நெஞ்சம் பொறுத்திரு!

பொறுமை கொள்வது அறமாகும்
அறத்தின் விளைவு
பேரின்பம்!

அவசரத்தின் விளைவுகள்
சிக்கலொடு சிற்றின்பங்கள்

நிதானத்தின் விளைவு
நிகரற்ற வெற்றி!

பழையோன் சொன்னது போல்
உண்மையில்
பொறுமை கொள்பவன்
புவியையும் ஆழலாம்!

தோல்விகளைக் கண்டு
நெஞ்சம் குறுக்காதே தோழா
நெகிட்டு…

முப்பாய்ச்சலொடு முழங்கால் உடைந்தாலும்
நிப்பாட்டுவதில்லை சிலந்தி
தன்
வலை ஆக்க முயற்சி
ஜெயம் நோக்கும் வரை!

நீ
தோல்வியுறும் கணத்தின்
வேதனைத் துளிகளை
உன்
வெற்றி ஆயுதத்தின்
மூலப் பொருளாய் மாற்று!

அல்லலின் விளிம்பில்
உள்ளம் துடிக்கும் கணம்
விரக்தியின் தணலில்
நெஞ்சம் உருக்கு!
இரும்பையும் விஞ்சும் வீர பதமேற்று!

சாவே வந்தெதிர் வாள் வீசிச் சமர்த்தாலும்
வாழ்வேன் நான்…!
வீர மொழி பேசு!

தாழ்வு என்ற கோழைச் சிந்தனை – உன்
நாளை வாழ்வை நரகமாக்கும்..
நசுக்கி எறி…!

பாரடா வீரா…

இன்றைய உனது எண்ணற்ற இழப்புக்கள்
நாளைய உனது
மாபெரும் வெற்றிக்காய்!

நம்பு….

உன் மனதில் மாசில்லாதவரை…
உன் சிந்தனையில் கீழ்த்தரம் இல்லாதவரை….
உன் நேர்மையில் கலப்படம் இல்லாதவரை….
உன் நடத்தையில் அசுத்தம் இல்லாதவரை….

நெஞ்சை நிமிர்த்தி
நம்பிக்கை ஆணி அடி!

தேதி சொல்லா ஓர் நாள்..

நீ புதைத்த தியாக வித்து
சுவர்க்க விருட்சமாய்
உருவெடுக்கும்!

உலகப் பிதாவின் அருட்கனிகள்
உன்
வாழ்நாட்களைச் சுவைப்படுத்தும்!

பூகோளத்தில் உன் வாழ்வு
புதுப் பொலிவு கொள்ளும்!

நம்பு….

வினை விதைத்தவன் வயல்
தினை விளைவு நிகழ்த்தாது!!!

-மருதன்-