கலாசார புரட்சி…!














சிறப்பு மிகு ஆற்றிடை மொழியே தமிழ்
சிந்தை மிகு சிறப்பாலே சிறந்தது இனம்
விந்தை மிகு விழுமியப் பண்புக ளெல்லாம் - விடியலை
விசித்திரமாய் ஆக்கியதை யாவும் கண்டீர்…!

உயரிய கலை கலாசாரப் பண்பாடு
தமிழ் உயிர்வழியே தலைத்திடும் திறன்கூடு - இதை
உணர்ந்தவர் மனதில் இல்லை முரண்பாடு – அதனால்
உலகினில் தமிழே சிறந்த வழிபாடு..!!

பரம்பரை பரம்பரையாய் எம்மினம் பாடுபடும்
பாரினிலே பாதுகாத்த மரபினை யெல்லாம் விடும்
மறுமலர்ச்சியால் மாந்தர்கள் மனதில் நடும்
மாற்றங்களால் எம் தமிழே இனிக் கெடும்..!!

ஆடை குறைப்பெல்லாம் அழகென்று சொல்லும்
மேற்கைத்தேய கலாசார மோகம் எமக்குள் மெல்லும் - இதனால்
மரபெல்லாம் மேதினிலே மேன்மையின்றி செல்லும் - இந்நிலை
எம் தமிழினத்தையே நாளை கொல்லும்..!!

மேன்மை கொண்டு யாவும் தருமா
ஆங்கிலேய அ நாகரிகம் - தமிழ்
வீரம் கொண்ட வரலாற்று பதிவினிலே – யாவும்
வீழ்ந்துதான் கிடக்கும் பாரும் பாரினிலே..!!

பண்கெட்ட பாட்டினைப் போல் பாரில்
நற்பண்புகள் சீர் இன்றி வாழ்தல் ஊரில்
சீர்பெற்றுச் சிறந்திடுமோ வாழ்க்கைத் தேரில்
நம் கலாசாரம் சீரழிய வைத்திடலாமா சிந்தித்துப் பாரீர்…!!

சீர் கொண்ட நன்நெறியை சிரத்தில் ஏந்தி
விருப்புடன் ஆய்ந்து உணர்ந்து அதனை ஒழுகி
கவர்ச்சியில் கண் கலந்திடல் விட்டகன்று
கலாசாரத்தை கண்ணியமாய் காத்திடல் நன்று..!!

மங்கிய தோர் நிலவினைப் போல்
மங்கள கலாசாரம் மறைந்துவிடும் இந்நிலையில்
மாட்சிமை தாங்கி மலர்ச்சிகள் கண்டிட
புரட்சிகளாக்குவோம்...! புதுமைகளாக்குவோம் வாரீர்..!!


கவி வார்ப்பு
கலைஞர். ஆனந்தத்தில் ஒரு அனல்