பிச்சைக் காரன்












எச்சில் இலைக்கென நாம்
ஏங்கிநின்ற நாட்கள் போய்
''எங்களுக்கும் காலம் வரும்'' எனும் துணிவில்,

கச்சேரி வேலை செய்யும்
கால்சட்டைக்கார ஐயாஉன்..
கருணை தனைவேண்டி நின்றோம்...!

உன் தயவால் -

''பிச்சைச்சம் பளம் பெற்று..,
பிரச்சினைக்கு முடிவு பெற்று....,
''பிரஜைகளில் நாங்களுந்தான் ஒருவர்......''

என்ற -

உண்மை இறுமாப்பில்..,
''உரிமைப் போராட்டம்'' நடத்துவோம்,
உன்போன்று -
உயர்விடத்தில் இருப்போர்க்கு...,
உதவிக் கரம்கொடுத்து,
''உறவுக்குக் கைகொடுப்போம்''
என்று -

பெருமையுடன் நினைத்தோம்....
பெரிதாக உனை மதித்தோம்....!

''பிச்சைச் சம்பள''த்தைப்,
பெற்றுத் திரும்புகையில்,
பெருநன்றி இதயத்தால் சொன்னோம்...!

நீயோ -

''சிறுகொமிசன்'' தனைக்கேட்டு நின்றாய்.....!

இதயம் வலித்ததையா....
அதனை -
இறுக அழுத்தினோம்..!

அங்கே -

சிறிதும் நீயில்லை..
''சில்லறை''யாய் நொருங்கிவிட்டாய்....!

ஏன் ஐயா...!

உப்பிப்பெருத் துனது,
உடல்தூக்க முடியாமல்...,
ஊர்ந்தூர்ந்து நடக்கின்ற நீ...!

எம்போன்றோர் -

''பிச்சைச்சம் பளத்திலேதான்
பெருத்தாயா...?

பிச்சைப் பணத்தினுக்கும்..,
இச்சையுடன் ஏங்கும் நீ..,
''பிச்சைக் காரன்''தான்...!

 நம் -
பின்னாலே வந்துவிடு...!

கச்சேரி வேலையெல்லாம்....,
உனக்குக் -
கடைசிவரை நல்லதல்ல...!

''பஸ்நிலையம்'' தான் உனக்குப்,
''படியளக்கும்..! ''


ஸ்ரீராம் விக்னேஷ்
திருநெல்வேலி
தமிழ்நாடு.