தமிழில் ஹைக்கூ கவிதைகள் - 02


 '' வெகுசன இதழ்களில் ஹைக்கூ கவிதைகளை அறிமுகம் செய்து கவிக்கோ அப்துள் ரகுமான் , சுஜாதா எழுதிய கட்டுரைகள் தமிழ் கவிஞர்களிடத்து தனித்த கவனிப்பைப் பெற்றன. 
       1984 ஆகஸ்டில் புள்ளிப் பூக்கள் எனும் ஹைக்கூ நூலை கவிஞர் அமுதபாரதி எழுதி வெளியிட்டார். இது தமிழின் முதல் ஹைக்கூ நூலாகும். இதனைத் தொடர்ந்து தமிழில் பரவலாக ஹைக்கூ நூல்கள் வெளிவரத் தொடங்கின. 1988 இல் ஏப்ரலில் தமிழீழத்தின் முதல் ஹைக்கூ நூலாக சு.முரளிதரன் எழுதிய கூடைக்குள் தேசம் வெளிவந்தது. தமிழில் முதல் ஹைக்கூ நூல் வெளிவந்த இந்த 25 ஆண்டுகளில் 2010 வரை 300 ற்கும் மேற்பட்ட தமிழ் ஹைக்கூ நூல்கள் வெளிவந்துள்ளன. உலகில் வேறெந்த மொழியிலும் இப்படி ஒரு குறிப்பிட்ட கவிதை வடிவத்திற்கென்றே இவ்வளவு நூல்கள் வெளிவந்ததாய்த் தெரியவில்லை.
சுண்டக் காய்ச்சிய இறுகிய மொழிநடை
மனசின் பதிவுகளைக் காட்சிப்படுத்துதல்
மூன்றாவது வரி மின்தாக்கு
      எனும் மூவகை அம்சங்களை உள்ளடக்கி தமிழ் ஹைக்கூ கவிதைகள் இன்று பல புதிய இளைய படைப்பாளர்களால் எழுதப்படுகின்றன. தமிழகத்தில் இன்றைக்கு ஹைக்கூ கவிதை எழுதுவதற்கென்றே ஒரு கவிஞர் பட்டாளம் புது உத்வேகத்தோடு இயங்கி வருகின்றது.
     ஜப்பானிய ஹைக்கூ வை தமிழில் ஐக்கூ குறும்பா, துளிப்பா என பலவாறு அழைத்தாலும் உலக மொழிகளில் எல்லாம் அறிமுகமாகியுள்ள ஹைக்கூ கவிதைகளை நாமும் அவ்வாறே அழைப்பதே சரியாயிருக்கும்.
     தமிழில் சித்தர், அம்மானை போன்ற மரபு வடிவங்கள் ஹைக்கூ வடிவத்தை ஒத்திருந்தாலும் ஹைக்கூ கவிதையின் சிறப்பு அதன் செறிவான மொழியும் காட்சிப்படுத்தலுமே ஆகும். 
 தொடரும்.....

அன்புடன்
மு.முருகேஷ்