இந்தப் பூக்களின் வாசம்














வண்ணங்களின்
மொழியறிந்து
புன்னகைப்பூக்கின்றன மலர்கள்
தென்றலிடம்
மௌன மொழி பேசியே
மகரந்தந்தத்தை
அள்ளித் தெளிக்கின்றன
வந்தமரும் வண்டுகளின்
சிறகடிப்பில் !

நெஞ்சம் கொதிக்கும்
கவலைகள் இருப்பினும்
அன்றலர்ந்த மலர்களை
நோக்கும் போதெல்லாம்
இலவம் பஞ்சாய்
காற்றில் பறக்கின்றன !

மென்மைக்கும்
பெண்மையின் தன்மைக்கும்
உனது மிருதுவான
தோற்றமே எழிலார்ந்த உவமை !
நாளை நடப்பன
நல்லதாய் இருக்கட்டும்
இன்றைய பொழுதின்
நிகழ்வுகள் கடக்கையில்
நேற்றைய நாளின்
மொட்டுகள் மலர்களாய்
எங்களின் கைகளில் !

சிறு புன்னகையின்
ஒளிக்கீற்றாய் மானுடம்
வாழ்கிறது என
சொல்வதெல்லாம்
நாங்கள் வாழும்
இந்தப் பூக்களின் தேசம்
பேதமற்று
ஒன்றுபடுதலால் மட்டுமே !

கா.ந.கல்யாணசுந்தரம் 
செய்யாறு