பரிசல்காரனின் பண்பு














( 1 )
காவிரியில்   நீராடப்   புகையின்   கல்லாய்க்
        காண்கின்ற   ஒகேனக்கல்   சென்றேன்  நேற்று
நாவிரித்துச்   சொல்லொண்ணா   எழிலைக்  கொட்டி
        நடனமாடும்   இயற்கையவள்   முகத்தைக்  கண்டேன்
பூவிரித்தாற்   போல்கொட்டும்  அருவிக்   குள்ளே
        புகத்தலையில்   விழும்நீரில்   இன்பம்  துய்த்தேன்
காவிற்குள்   எழும்காற்றின்   இசையாக்  காதில்
        கலந்தருவி   ஓசையிலே   இழந்தேன்  என்னை !

எண்ணெயினைத்  தேய்த்துடலை   நீவி ;  சென்னி
        எழுந்துநிற்கும்   கழுத்தினிலே   சொடுக்கெ   டுத்துக்
கண்காது   வழியினிலே   எண்ணெய்   ஊற்றிக்
        கனல்பறக்கத்   தேய்த்துடலின் சூட்டை   நீக்கி
மண்மீது   படுக்கவைத்து   சுளுக்கெ   டுத்து
        மடக்கிக்கை   கால்விரல்கள்    நெட்டெ   டுத்துத்
தண்ணீரில்   குளிக்கனுப்பும்   காட்சி   கண்டே
        தரைபாலம்   கடந்தடுத்த   கரைக்குச்  சென்றேன் !

ஓடிவரும்   நீரினிலே   பரிசல்  ஓட்டி
        ஓங்காரக்   காவிரியின்   அழகைக்   காட்ட
கூடிநின்று   அழைக்கின்ற   பரிசல்   காரர்
        குரல்கேட்டுப்   படகுதுறை   அருகில்  செல்ல
நாடிவந்த   எனைப்பார்த்துத்   தலைக்கு  நூறு
        நன்றாகக்   காட்டிடுவேன்   வாவா  என்றான்
தேடிவந்த   சிலரங்கே    பேரம்   பேசித்
        தெளிவாகச்   சொல்லிட்டார்   தொன்னூ  றென்றே !
     


 ( 2)
பத்துப்பேர்   அமர்கின்ற   பரிச   லுக்குள்
        பன்னிருவர்   அமர்ந்திட்டோம்   குறைப  ணத்தால்
மொத்தத்தில்   அவன்கணக்கில்   முழுதாய்   சேர
        மௌனமாக   பரிசலினை   நீரில்   விட்டான் !
சத்தமின்றித்   துடுப்பினிலே   தள்ளும்   போது
        சதிராடி   சுமையதிகப்   பாரத்   தாலே
தத்தளித்துப்   பரிசல்தான்   பக்கம்   சாய
        தலைநூறு   குறைத்தவனோ   விழுந்தான்  நீருள் !

இழுக்கின்ற   நீரினிலே   நீச்சல்   போட
        இயலாமல்   உயிர்காக்க   கூவு  கின்றான்
அழுகையுடன்   அமர்ந்திருக்கும்   நண்ப   ரெல்லாம்
        அவனுயிரைக்   காப்பதற்கே   துடிக்கின்   றார்கள் !
தொழுதபடி   பரிசலினை   ஓட்டு   கின்ற
        தோழனிடம்   எவ்வளவு   பணம்கேட்   டாலும்
வழுவாது   தருகின்றோம்   காப்பாற்   றென்றார்
        வளைந்தவனும்   குதித்திழுத்துப்  பரிசலுல்  போட்டான் !

நன்றியுடன்   கரைசேர்ந்து   பணம்கொ  டுக்க
        நானுயிரைக்   காத்ததற்கே   கூலி  வாங்கேள்
என்சொல்லைக்   கேட்டுநூறு  கொடுத்தி   ருந்தால்
        ஏற்றிருப்பேன்  இப்பணமோ   வேண்டா  என்றான் !
சொன்னசொல்லில்   மனிதநேயப்   பண்பைக்   கண்டு
        சொல்லுதற்குச்  சொல்லின்றி   வெட்கி  நின்றோம்
என்றென்றும்   உழைக்கின்ற   தோழர்   கட்கே
        ஏற்றகூலி   தரஉறுதி   ஏற்றோம்  சேர்ந்தே !

பாவலர் கருமலைத்தமிழாழன்-
தமிழ்நாடு