''கீழ்த்திசைப் பண்பாட்டின் வாழ்வியல் சூழலோடும் ஜென் புத்தமதத் தத்துவப் பார்வையின் பின்னணியோடும் 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கண் மலர்ந்தவையே ஹெக்குப் பாடல்கள் என்றழைக்கப்பட்ட ஹைக்கூ கவிதைகள்.
ஜப்பானிய மண்ணில் வேர்விட்டுத் துளிர்த்த ஹைக்கூக் கவிதைகளுக்கு நீர் வார்த்த ஹைக்கூ முன்னோடிகள் பாஷே, பூஸன், இஷா, ஷிகி ஆவர்.
வெறும் வரட்டுத் தத்துவமாக இல்லாமல், இயற்கையின் மீதான காதலோடு இருந்ததால் ஜென் தத்துவ ஞானிகளின் கைப்பிள்ளையாய் ஹைக்கூ வளர்ந்தது. சூறைக்காற்றில் திசைதிருப்பி விழும் விதை போலின்றி தன்னியல்பாய் உலகின் திசைகளில் மெல்லத் தன் சின்னச் சிறகை விரிக்கத் தொடங்கியது ஹைக்கூ.
தமிழுக்கு முதன்முதலாக ஹைக்கூ கவிதைகள் பற்றிய அறிமுகத்தை தந்தவர் மகாகவி பாரதியார். சுதெசமித்திரன் (16.10.1916) இதழில் ''ஜப்பானியக் கவிதை எனும் தலைப்பில் பாரதியார் ஒன்றரைப் பக்க கட்டுரை எழுதினார். அதில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல், ஜப்பானியக் கவிதையின் விஷேத் தன்மை என நோகுச்சிப் புலவர் சொன்னதையே திரும்பவும் கூறி சிலாகித்து எழுதியுள்ளார் பாரதி.
பாரதியின் இக் கட்டுரை வெளியான 60 ஆண்டுகளுக்குப் பிறகு 1966 ஜனவரியில் கணையாழி இதழில் சில ஹைக்கூ கவிதைகளை தமிழில் சுஜாதா மொழிபெயர்த்தார். நடை (அக்டோபர் 1968) இதழில் சி.மணி (பழனிச்சாமி) ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை ஆங்கில வழி மொழிபெயர்த்து வெளியிட்டார்.
1970 களுக்கு பிறகே, தமிழில் ஹைக்கூ கவிதைகள் எழுதப்பட்டன. கவிக்கோ அப்துல் ரகுமான் தனது பால்வீதி (1974) தொகுப்பில் சித்தர் எனும் தலைப்பில் சில தமிழ் ஹைக்கூ கவிதைகளை எழுதினார்.
தொடரும்.....
அன்புடன்
மு.முருகேஷ்