உழவைக் காப்போம்






















விளைகின்ற   நிலங்களினை   மலடு  செய்து
     விலையாக்கித்   தொழிற்சாலை   கட்டு  வித்தோம்
களைகளாகக்  கட்டடங்கள்   வளர்ப்ப   தற்குக்
     கழனிகளை   மனைகளாக்கி   வேலி  நட்டோம்
கிளைகளாகப்  பரந்துநின்ற  மரங்கள்  தம்மின்
     கீழ்வேரை  வெட்டிசாய்த்து   சாலை  போட்டோம்
துளைபோட்டு  ஓசோனை   அழித்த  போல
     தூயஉழவு   தொழிலினையே   அழித்து  விட்டோம் !

எந்திரங்கள்  நிறுவிநாட்டை   முன்னேற்  றத்தில்
     ஏற்றிட்டோம்   எனப்பெருமை   பேசு  கின்றோம்
சந்ததிக்கோ   அறிவியலின்  அறிவை  ஊட்டிச்
     சாதனைகள்   படைப்பதற்கே  ஊக்கு   வித்தோம் !
பந்தியிலே  அமர்ந்துநாமும்  பணத்தாள்  தம்மைப்
     பறிமாறிப்   பட்டினியை   ஒழித்தோ   மென்று
சிந்தனையில்  மேல்நாட்டின்   மோகம்  ஏற்றி
     சிறந்திருந்த   உழவுதனைச்  சிதைய   விட்டோம் !

தொழிற்சாலை   பெருகினாலும்   விஞ்ஞா  னத்தின்
     தொழில்நுட்பம்  பெருகினாலும்   பொருளா  தாரம்
செழித்ததிங்கே  பெருகினாலும்   நாட்டு  மக்கள்
     செம்மையாக   வாழ்வதற்கோ  உணவு  தேவை !
எழிலாக  நாடொளிர   சொந்த   மண்ணில்
     ஏர்கலப்பை  விவசாயம்  ஓங்க  வேண்டும்
வழிவழியாய்   வந்தநம்மின்   விவசா  யந்தான்
     வளர்ச்சிக்கே  வித்தாகும்  வாழ்விப்  போம்நாம் !


பாவலர் கருமலைத்தமிழாழன்-
தமிழ்நாடு