சக்தி துணை: -
ஆதிபராசக்தி அன்னை கலைவாணி
அம்பிகைமேற் கும்மி பாடுதற்கு
சோதி விநாயகன் பாதக்கமலத்தை
தொட்டு அடி பணிந் தேத்திடுவோம்.
ஆண்டுக் கொருமுறை கண்டிடும் பூசையாம்
அன்னை கலைவாணித் தேவியவள்
வேண்டும் வரங்களைத் தந்திடுவாள் - எங்கள்
வித்தகி வாணியைப் போற்றிடுவோம்.
சக்திக் கலைக்கூட மாணவர் நாங்களும்
தித்திப்பாய் ஆண்டாண்டு செய்து வரும்
வாணி சரஸ்வதித் தேவியின் ஊர்வலம்
வந்திடும் கோலத்தைப்பாருங்கடி.
மாவிலை தோரணம் கட்டுங்கடி - நல்ல
மணி விளக்குகள் ஏற்றுங்கடி
பூரண கும்பங்கள் வையுங்கடி - எங்கள்
புத்தகத் தாயாரின் ஊர்வலத்தில்.
கற்பூர தீபங்கள் காட்டுங்கடி - நல்ல
காணிக்கையை அள்ளிப் போடுங்கடி
சொற் பிரளாத் தேவி தேரில் வருவதை
நற்கவி கொண்டுமே பாடுங்கடி.
கல்விக்கரசி சரஸ்வதியாம் - எங்கள்
கற்பகத் தேவியும் வாராளாம்
சொல்லால் செயலால் கருத்துக்களால் - பூக்கள்
தூவுங்கடி வந்து பாருங்கடி.
பாமாலை கட்டியே சூடுங்கடி - நல்ல
பக்திப் பாசுரங்கள் பாடுங்கடி
நாமகள் நாமத்தைக் கூறுங்கடி - நீங்க
நல்ல வரம் பெற்று வாழுங்கடி.
வீதிகள் தோறும் நிறைகுடங்கள் - நல்ல
விரிந்த பூக்களின் வாசனைகள்
ஆதிபரா சக்தி ஊர்வலத்தில் - எங்கும்
அழகுத் தோரணச் சித்திரங்கள்.
மாணிக்கப்பிள்ளையார் கோவிலைத்தாண்டியே
மாதரசி தேவி வாறாளாம்
காணிக்கை பூசைப் பொருட்களைச் சூடியே
வாணி அருள் பெறக் கூடுங்கடி
சக்தி வித்தியாலத் துள்ளிருந்து - எங்கள்
சங்கரி வாணியும் வாறாளாம்
பங்கமிலா வாழ்வு தாறாளாம் - எங்கள்
பத்தினித் தேவி சரஸ்வதியும்.
மஞ்சள் அரைத்துத் தலை முழுகி - நல்ல
மணக்கும் சந்தண வாசமிட்டு
கொங்சிக் குலாவிடும் அஞ்சுகமே - எங்கள்
கோதை வருவதைப் பாருங்கடி.
கம்பனின் நாவில் உறைந்தவளாம் - பல
வம்புகள் பண்ணிடச் சொன்னவளாம்
கம்பராமாயணக் காவியத்தை - அன்று
அம்புவிக்குத் தரச்செய்தவளாம்.
ஏழைக் கிரங்கிடும் மாதரசி - இவள்
எங்களைக் காத்திடும் பூவரசி
சாலைக் கிறங்கியே தேரினில் வந்திடும்
சங்கதியை வந்து பாருங்கடி
வாணி சரஸ்வதி தேவி பரா சக்தி
வாழிய வாழிய வாழியவே
வாயாரப் பாடிய ஊர்வலக் கும்மியை
கேட்டோர் ரசித்தோரும் வாழியவே.
சுபம்
எஸ்.பி. நாதன்
படம் : காரதீவு.ஓஆர்ஜி
படம் : காரதீவு.ஓஆர்ஜி