மட்டக்களப்பு மகுடம் சஞ்சிகையின் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் கவிஞர் வி. மைக்கல் கொலின் ஏற்பாட்டில் மூத்த கவிஞர் தாமரைத்தீவானின்(சோ.இராசேந்திரம்) பொன்னகம் மீட்போம் கவிதை நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் கலந்து கொண்டார். நூலின் முதல் பிரதியை மட்டு தமிழ்ச் சங்கப் பொருளாளர் வி.ரஞ்சிதமூர்த்தி பெற்றுக்கொண்டார். ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் தாமரைத்தீவானின் தடங்கள் எனும் தலைப்பில் பேராசிரியர் செ.யோகராசா சிறப்புரையாற்றினார். நூல் நயவுரையினை முன்னால் வடகிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் கலாபூசணம் செ.எதிர்மன்னசிங்கம் நிகழ்த்தினார். வரவேற்புரையினை மகுடம் வி.மைக்கல் கொலின் நிகழ்த்தினார்.
அகவை எண்பத்தைந்தில் கால்தடம் பதிக்கும் கவிஞர் தாமரைத்தீவானின் இருபத்தெட்டாவது வெளியிடாக பொன்னகம் மீட்போம் கவிதை நூல் வெளிவந்துள்ளது. கவிஞர் தாமரைத்தீவான் (சோ.இராசேந்திரம்) திருகோணமலை கிண்ணியாவை சேர்ந்த பழம்பதி தாமரைவில்லில் 1932இல் பிறந்தவர். 1942இல் இருந்து ஈச்சந்தீவில் வசித்து வந்தார். 1990களில் இடம்பெயர்ந்து திருகோணமலை நகர்ப் பகுதியில்இன்று வரை வசித்து வருகின்றார். தான் பிறந்த ஊரையும் (தாமரைவில்) வளர்ந்த ஊரையும் (ஈச்சந்தீவில்) இணைத்து தனது புனைபெயராக கொண்டவர். மூதூர் அந்தோனியர் பாடசாலையில் தனது ஆரம்ப கல்வியைக் கற்று மட்டக்களப்பில் ஆசிரியர் பயிற்சி பெற்று 1955இல் ஆசிரியராகி பதுளை, கந்களாய், உப்பாறு,ஈச்சந்தீவு போன்ற இடங்களில் ஆசிரியர் பணிபுரிந்து 1972இல் அதிபராகி, 1987இல் ஓய்வு பெற்றவர். தமிழ் தேசியத்தின் பால் தீவிர பற்றும் காதலும் கொண்ட கவிஞர் தாமரைத்தீவான் இன்று வரை ஓய்வில்லாமல் எழுதி குவித்துக் கொண்டிருக்கின்றார்.
பேராசிரியர் சி.மௌனகுரு தனது உரையில் மேலும் கூறுகையில்
இவரது கவிதைகளில் தமிழ் இலக்கிய ஈடுபாடும், நவீன சீர்திருத்த கருத்துக்களும், சமூக மாற்றம் வேண்டும் எனும் பேரவாவும் தமிழுணர்வும் மணப்பதை அவதானிக்க முடிகிறது. வயதாகிவிட்டாலே பழமைக்குள் புகுந்து விடும் மரவு கொண்ட நமது மக்கள் மத்தியில் புதுமைகளை வரவேற்கும் முற்போக்கு இளைஞராக கவிஞர் தாமரைத்தீவான் தோற்றம் காட்டுகிறார். பாரதிதாசன் பாணியிலே எழுதி வந்துள்ள தாமரைத்தீவான் மொழிப்பிரயோகத்தோடு எழுதும் இளங் கவிஞர்களை நிச்சயம் படித்திருப்பார். தாமரைத்தீவான் அவர்களை கவரவில்லை போலும் கவர்ந்திருப்பின் அவரது கவிதை வீச்சு இன்னுமின்னும் மேலோங்கியிலுக்கும். கவிஞனுக்கேயுரிய கொதிக்கும் மனோநிலையுடன் இன்னும் வாழ்ந்து வருபவர். இக் கொதிநிலைதான் கவிஞனுக்கு படைப்பு உந்துதலை தருகிறது. படைப்பு உந்துதலோடு படைப்பு திறனும், மொழியாற்றலும் சிந்திக்கையில் அவை உன்னத கவிதைகளாக உருவாகும். எண்பத்தைந்து வயதைத் தாண்டி கவிஞர் தாமரைத்தீவான் தொண்ணூறு வயதில் படைக்கப்போகும்; கவிதைகளை நான் எதிர்பார்க்கின்றேன் என்றார்.
- செ.துஜியந்தன் -