கோவிலூர் செல்வராசனின் ஊருக்குத் திரும்பணும் சிறுகதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா

கோவிலூர் செல்வராசனின் "ஊருக்குத் திரும்பணும்" சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கண்ணகி கலை இலக்கிய கூடலின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் கண்ணகி கலை இலக்கிய கூடலின் தலைவர் செங்கதிரோன், த.கோபாலகிருஷ்ணன் தலைமையில் இன்று (20.08.2016) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளர் .வ .கருணநாதன் முதன்மை அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பின் மூத்த எழுத்தாளர்களான நவம் என அறியப்பட்ட திரு.சி.ஆறுமுகம் அவர்களும் கவிஞர் கா.சிவலிங்கம் அவர்களும் மற்றும் பிரசித்த நொத்தாரிசும் திடீர் மரண விசாரணை அதிகாரியுமான சமாதான நீதவான் பொ.சிவசுந்தரம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மெளன இறை வணக்கத்தின் பின் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வைத் தொடர்ந்து கண்ணகி கலை இலக்கியக் கூடலின் உப செயலாளர் கதிரவன் த.இன்பராசா அவர்களின் வரவேற்புரை இடம் பெற்றது. 
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் கூடலின் தலைவரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது தலைவர் தனதுரையில் எழுத்தாளருக்கும் தனக்கும் இடையேயான நீண்ட கால இலக்கிய உறவு பற்றியும் எழுத்தாளரின் எழுத்துக்களுக்குச் சமூகத்தில் உள்ள அங்கீகாரத்தன்மை பற்றியும் தொட்டுச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து நூலாசிரியர் அறிமுகத்தை மட்டக்களப்பு உயர் தொழிறுப்பக் கல்லூரியின் பணிப்பாளர் செல்வரெத்தினம் ஜெயபாலன் அவர்கள் மிகச் சிறப்பாக நிகழ்தியிருந்தார். அவர் தனது உரையை ஆரம்பிக்கும் போது இலங்கை வானொலி ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் போன்று தனது குரலை மாற்றி எழுத்தாளர் வானொலியில் சேவையாற்றிய காலத்தை நினைவுபடுத்தியமை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவர் மஙை்களையும் கவந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து  பிரதம விருந்தினர் முன்னிலையில் கண்ணகி கலை இலக்கியக் கூட வின் துணைத் தலைவர் திரு.மா.சதாசிவம் அவர்களினால் நூல் வெளியிடப்பட மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கப் பொருளாளரும் சைவப்புரவலருமாண திரு.வீ.ரஞ்சிதமூர்த்தி அவர்கள் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

வெளியீட்டைத் தொடர்ந்து வருகை தந்திருந்த விருந்தினருக்கான நூல்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதனை அடுத்து நூல் நயவுரையினை
கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் திருமதி.ரூபிவலன்ரீனா பிரான்சிஸ் நிகழ்தினார். தனக்கு வழங்கப்பட்ட வகிபாகத்தினன மிகச் செல்வனேயும் சுவை படவும் தனது அனுபவங்களுடனும் சொன்ன விதம் வருகை தந்திருந்தோரை நூலினை வாசிக்கத் தூண்டுகோலாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.

அதைத் தொடர்ந்து சிறப்பு அதிதிகள் உரை, முதன்மை அதிதிகள் உரையும், நூலாசிரியரின் ஏற்புரையும் இடம் பெற்றது. முதன்மை அதிதி தனது உரையில் தான் வெளிநாட்டில் வசித்த காலப்பகுதியில் இருந்த வாழ்வு பற்றியும் எப்போது ஊருக்குத் திரும்புவோம் என்ற உணர்வுடன் வாழ்ந்த தனது அனுபவங்களையும் வெளிநாட்டு வாழ்க்கையின் கஸ்டங்கள் பற்றியும் பதிவு செய்தார்.

நிறைவாக எழுத்தாளர் தான் மட்டக்களப்பு பற்றி இயற்றிப் பாடிய பாடல்களை இசையோடு மாக இனிமையாகப் பாடியிருந்தமை அங்கிருந்த அனைவரையும் வெகுவாகக் கவர்ந்திருந்தது. மிக நீண்ட காலத்தின் பின் நேரடி மெல்லிசைப் பாடல்களைக் கேட்டு இரசித்த மன நிறைவுடன் விருந்தினர். தங்கள் மனங்களை அந்தப் பாடல்களிலேயே தொலைத்துச் சென்றனர்.

சபா.மதன்