கடலலைகள் தழுவ, கடற்காற்று வாழ்த்த கடலோரத்தில் கவிநூல் வெளியீடு

   
 'படைப்பாளிகள் உலகம்' அனுசரனையுடன் 'செல்லமுத்து வெளியீட்டகம்' வெளியீடு செய்யும் கிளிநொச்சி புனித சென்.திரேசா மகளிர் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவி மோசேஸ் டிலோஜினி அவர்கள் எழுதிய 'அகரம்' கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வானது, 23.01.2016(சனிக்கிழமை) யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடலோரத்தில் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்றது.
      நிகழ்வுக்கு 'படைப்பாளிகள் உலகம்' யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பொலிகையூர் சிந்துதாசன் தலைமை வகித்தார். வரவேற்பு நடனத்தினை செல்வி மரியரொக்சி வழங்கினார். வரவேற்புரையை செல்வி மோசஸ் பவுஸ்தீனா வழங்கினார். ஆசியுரையை அமலமரித் தியாகிகள் வடமாகாணப் பிரிவைச் சேர்ந்த அருட்பணி ரமேஷ் அடிகளார் வழங்கினார். அறிமுக உரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார். நூலினை 'படைப்பாளிகள் உலகம்' நிறுவுநர் ஐங்கரன் கதிர்காமநாதன் அவர்கள் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியை கிளிநொச்சி புனித சென்.திரேசா மகளிர் கலலூரி ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார். வாழ்த்துக் கவியினை கவிஞர் வே.முல்லைத்தீபன் வழங்கினார்.
     சிறப்புரையினை 'படைப்பாளிகள் உலகம்' நிறுவுநர் ஐங்கரன் கதிர்காமநாதன் வழங்கினார். வெளியீட்டாய்வுரையினை வவுனியா 'தமிழ் விருட்சம்' செயலாளர் கவிஞர் மாணிக்கம் ஜெகன் வழங்கினார். ஏற்புரையினை நூலாசிரியர் டிலோஜினி வழங்கினார். இந்த நிகழ்வில் நூலாசிரியரின் பெற்றோர்கள் திரு.திருமதி மோசஸ் ஆகியோர் மாலையிட்டு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர். நூலின் ஆசிரியர் டிலோஜினி அவர்களுக்கு வவுனியா 'தமிழ் விருட்சம்' அமைப்பினரால் நினைவுச் சின்னம் வழங்கி கெளவிக்கப்பட்டது. இயற்கையான கடலோடு இணைந்த சூழலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நிறைந்த உறவுகள் கலந்து சிறப்பித்தனர்.

யோ புரட்சி