தித்திக்கும் தீபாவளித் திருநாளே! - பேரினவாதிகளின்
புத்திக்கும் நல்வழி புகட்டமாட்டாயா?
பக்திக்கும் வழி வகுக்கும் நன்நாளே! - அப்பாவி தமிழ்கைதிகளின்
சக்திக்கும் ஒளி கொடுக்கமாட்டாயா?
எத்திக்கும் அவர்கள் அழுகைக்குரல்!
பத்திக்கும் நெருப்பாய் ' எம் நெஞ்சங்களில்!
ஒளி தரும் திருநாளில்- எம் தமிழ்கைதிகள்
வெளி வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம்!
களி உண்ட துன்பம் பறந்து - இனிய
வழி திறக்கும் என்று எதிர்பார்த்த - இலவு காத்த
கிளிகள் இவர்கள்!
பழி தீர்த்தது போதும் -பேரினமே!
நல்லாட்சியில்
குழி பறிக்காது, மொழிபார்க்காது,
அவர்களையும்வாழவிடுங்கள்!
அதற்கு வழி செய்யமாட்டாயா தீபத்திருநாளே!
இருள் நீக்கி ஒளிதரும் - தீபத்திருநாளே!
அருள் தந்து அனைவரையும் -வாழ வைப்பாயா?
பொருள் வேண்டாம், பொன்வேண்டாம்!
சுருள்போட்டு சுமைதரும்
அடிமை வாழ்வை நீக்கி!
மருள் நீக்கி மகிமையைத்தந்திடுவாய்!
திருநாளே! தீபப் பெருநாளே!
வருவாயா?வளமான வாழ்வுதனை தருவாயா?
---எதிர்பார்ப்புடன்----
கல்லூர் சாந்தி