நிலவுதனில் கால்பதித்தோம் நிலத்தை
ஆய்ந்தோம்
நீள்புவியைச் சுற்றிவர
வழிய மைத்தோம்
கலம்அமைத்தோம் கடல்நீரைக் கடந்து
சென்றோம்
கண்டங்கள் பலவற்றைக்
கண்டு வந்தோம்
வலம்வந்தே வானியலின்
புதுமை காண
வானத்தில் செயற்கைக்கோள் பறக்க
விட்டோம்
நலம்கேட்கும் மனிதத்தைத் மட்டும்
நாமோ
நழுவவிட்டே அறிவியலின் கரம்பி
டித்தோம் !
நோய்பெற்றோம் நோய்தீர்க்கும் மருந்தும்
கண்டோம்
நோயாளி தம்கண்ணால்
நோக்கு மாறு
நோய்கண்ட உடலுறுப்பை அறுவை
செய்யும்
நேர்முறையை ; இதயத்தை
மாற்று கின்ற
வாய்ப்புதனை
; குளோனிங்கால் நம்மைப்
போன்றே
வார்தெடுக்கும் அற்புதத்தை
விஞ்ஞா னத்தின்
ஆய்வாலே நாம்பெற்றே
அன்பு என்னும்
அடித்தளத்தைச் சாய்த்துவீடு கட்டு
கின்றோம் !
இல்லத்தில் அமர்ந்தபடி
காணும் வண்ணம்
இணையத்தால் உலகத்தை
இழுத்து வந்தோம்
சொல்லின்றி விரலசைவில் நினைக்கும்எந்தச்
செயல்களையும் செய்கின்ற
கணினி கண்டோம்
இல்லறத்தில் இணையாமல்
குழாய் குழந்தை
ஈன்றெடுக்கும் புதுமுறையும் இங்கு
கண்டோம்
எல்லாமும் அறிவியலில்
பெற்றே நேயம்
என்கின்ற வாழ்வுயிரை
இழந்து விட்டோம் !
பாவலர் கருமலைத்தமிழாழன்