சொந்தம் சுகமாகும் சொர்க்கம் வசமாகும்
பந்தம் பலமாகும் பக்கத்தில் – வந்தமரப்
பாய்போடும் நட்பும் பணமிருந்தால்! அஃதின்றேல்
நாய்பார்க்கா துன்னை நிமிர்ந்து.
வந்தாய் கருவோடு, வாழ்ந்தால் வரலாறு ,
நொந்தால் தகராறு, நூலருந்து – அந்தரத்தில்
நின்றக் கதையேது?.’ நீத்தால் கருவாடு
என்றறிந்தும் ஏய்ப்ப தெதற்கு?
காசு கொடுத்துக் கடிநாயை வாங்கிக்கை
வீசி நடப்பருண்டோ? வேண்டாதோர் - மாசுக்
குணமறிந்து மாற்று வழிசமைக்கின் வாழ்வோ
மணம்வீசும் பூவை நிகர்த்து.
மெய்யன் நடராஜ்