அன்புநண்பன் அவசரமாய்
ஓடி வந்தே
அழுகின்ற முகத்தோடே
என்னைப் பார்த்து
உன்னைத்தான் நம்பிவந்தேன் இல்லை
யென்று
என்குழந்தை கையிலொரு
காசு மில்லை
எனக்கின்று நீயுதவி
செய்ய வேண்டும்
என்றேந்தி நின்றவனின் கரத்தில்
நானோ
எடுத்தளித்தேன் ஆயிரமாம்
தாளை அன்று !
சிலநாள்கள் சென்றபின்பு
சாலை யோரம்
சிற்றுண்டிக் கடையருகில்
அவனைப் பார்த்தேன்
நலமாக இருக்கிறாளா
உன்கு ழந்தை
நட்போடு நான்கேட்டே
தேநீர் தந்தேன்
பலமாகத் தலையாட்டித் தேநீர்
தன்னைப்
பருகியவன் ஊர்கதைகள்
பேசி யப்பின்
செலவுக்கு நான்கொடுத்த பணத்தைப்
பற்றிச்
செய்தியொன்றும் சொல்லாமல்
சென்று விட்டான் !
ஆண்டொன்று சென்றபின்பும் பலநாள்
பார்த்தும்
அவன்பெற்ற பணம்பற்றிப் பேச
வில்லை
தூண்டிலில்மீன் பிடிப்பதைப்போல் நான்பி
டித்தே
துடிப்பாக நான்கொடுத்த பணத்தைக்
கேட்க
ஈண்டுனக்குச் சொல்கின்றேன் உன்னி
டத்தில்
இருப்பதிகம் இருந்ததாலே
எனக்க ளித்தாய்
வேண்டியது போகமீதி
வைத்தி ருப்போர்
வேண்டியோர்க்குத் தருவதற்கே
என்றான் சென்றான் !
பாவலர் கருமலைத்தமிழாழன்