சமூக அவலங்களுக்கு எதிராக கவிஞர்களும் களத்தில் நின்று குரலெழுப்பிட வேண்டும்



வந்தவாசியை அம்மையப்பட்டு கிராமத்தில் அகநி  வெளியீட்டகத்தின் சார்பில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் மு.முருகேஷ், சமுதாயத்தில் நடைபெறும் அவலங்களைப் பற்றி எழுதுவதோடு நில்லாமல், அதனை எதிர்த்து களத்திலும் நின்று போராட கவிஞர்கள் முன்வர வேண்டும் என்று பேசினார்.                                              
                 இவ்விழாவிற்கு தொழிலதிபர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். 
                  கடைசிகுளம் வி.சுமதி அனைவரையும் வரவேற்றார்.
     
             பேராசிரியர் கவிஞர் ஜீவிதன் எழுதிய ‘மெளனம் பேசும் கண்மணி’ கவிதை நூலினை மக்கள் ஸ்டோர் உரிமையாளர் அ.ஜ.இஸத் வெளியிட, கடைசிகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜா.மகேஸ்வரன் பெற்றுக் கொண்டார். சிறப்புப் பிரதிகளை வந்தவாசி அரசுக்கிளை நல்நூலகர் கு.இரா.பழனி,லயா அறக்கட்டளை செயலாளர் யுவராஜ், ;ழ’ தொலைக்காட்சி இயக்குநர் வெ.அரிகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


      கவிதை நூலை அறிமுகம் செய்து கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது, ”இன்றைக்கு தமிழ்ச் சமுதாயம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. மழலையர் பள்ளிகளில் பயிற்றுமொழியாக ஆங்கிலம் புகுத்தப்படுகிறது. குடிநீர்த் தட்டுப்பாடு, மின் பற்றாக்குறை, உணவில் கலப்படம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என்று என தமிழகமே பிரச்சினைகளால் சிக்கித் தவிக்கிறது. இவற்றையெல்லாம் எப்படி தீர்ப்பது என்பது பற்றி யோசிக்க வேண்டிய அரசோ, மதுவிற்பனையை அதிகரிப்பது பற்றி ஆலோசனை செய்து வருகிறது. பெரியவர்கள், இளைஞர்கள் மது குடித்த நிலைமாறி, இன்றைக்கு பள்ளி மாணவர்கள், இளம் பெண்கள் என பலரும் குடிக்கு அடிமையாகி வருகிறார்கள்.
           சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் பலரும் இன்றைக்கு மக்களோடு இணைந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கவிஞன் என்ற வகையில் படைப்பாளனும் இந்தப் பிரச்சினைகளைப் பற்றி எழுதுவதோடு நின்றுவிடாமல், தானும் களத்தில் இறங்கி மக்களோடு சேர்ந்து போராட வேண்டிய சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. பேராசிரியர் கவிஞர் ஜீவிதனின் கவிதைகள் மெளனமாய் பேசினாலும் உரத்த குரலில் சமூகம் பற்றிய சிந்தனைகளை நமக்குள் விதைக்கின்றன. சமூக மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் படைப்புகளை எழுத்தாளர்கள் அதிகமாக படைத்திட வேண்டும். அத்தகைய படைப்புகளை மக்களும் வாங்கிப் படித்து ஆதரவு தர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
    
    நூலாசிரியர் கவிஞர் ஜீவிதன் ஏற்புரைற்றினார்.
   
  நிறைவாக,  மும்முனி க.உமா நன்றி கூறினார்.

படக் குறிப்பு;

  வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் அகநி 
வெளியீட்டகத்தின் சார்பில் நடைபெற்ற பேராசிரியர் கவிஞர்  ஜீவிதன்  எழுதிய "மெளனம் பேசும் கண்மணி" கவிதை நூலை மக்கள் ஸ்டோர் உரிமையாளர் அ.ஜ.இஸத் வெளியிட, கடைசிகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜா.மகேஸ்வரன் பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். அருகில் ( இடமிருந்து) தொழிலதிபர் இரா.சிவக்குமார் வெளியிட,  நூலாசிரியர் ஜீவிதன்,  கவிஞர் மு.முருகேஷ், நூலகர் கு.இரா.பழனி ஆகியோர் உள்ளனர்.