எந்த தண்டவாளத்தின் மீது ?

எனது பேனா முனைக்கும்
சிந்தனைக்கும் நடுவில்
கடத்திச் செல்லும் கற்பனைகள்
தூங்க விடுவதில்லை ....
எறும்புக்கும் யானைக்கும்
தாகம் ஒன்றுதான் என புரிந்துகொண்ட
ஆன்மாவின் இருப்பிடம்
மிகவும் லேசானது !
என்னைத் துறக்கும் உறக்கம்
ஒவ்வொரு நிமிடமும் கண்ணை மூடாது
தவமிருக்கிறது இருள்சூழ்ந்த
வனாந்திரத்தில் !


பேசிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில்
குழப்பங்கள் மேலிட
விடை காணாத வார்த்தைகள் மட்டுமே
கொடிபிடித்து கும்மாளம் இடுகிறது !
சிக்கலை விடுவிக்காத
எத்தர்களின் ஆளுமையில் தடம்புரண்ட
சமுதாயத் தொடர்வண்டியை
எடுத்து நிமிர்த்தி ஓடவைக்கப் போகிறார்கள் !
காற்றுவாக்கில் வந்த இந்த செய்தி
என்னுள் புகுந்து வினா எழுப்புகிறது....
எந்த தண்டவாளத்தின் மீது ?
இங்கே எறும்பும் யானையும் ஒரே வனத்தில்
விக்கலெடுத்துச் சாகின்றன....!

கா.ந.கல்யாணசுந்தரம்