எனது மகன்
எத்தனை தடவைகள்
என்னைக் கேட்டான்
“அப்பா எப்போ வருவார்” என்று
அவனது மனம்
நோகக் கூடா தென்று
பொய்ப் பூக்களைப்
புனைந்து புனைந்து
ஏமாற்றி வருகின்றேன்
அவனது வினாக் கணைகள்
எனது செவியை மட்டுமல்ல
நெஞ்சத்தையும்
துளைக்கின்றன
நான் யாரிடம் வினவுவேன்
எனது கணவன்
எங்கே என்று
தபாற்காரன்
தகவல் தருவானா ?
வானொலிச் செய்தி
வருத்தம் தீர்க்குமா?
பத்திரிகை
பதட்டம் தணிக்குமா?
தொலைந்த குரல்
தொலைபேசி எடுக்குமா?
அடுக்கி வரும் அலையென
ஆயிரம் வினாக் கணைகள்
தாலியை முத்தமிட்டு
தாகம் தீர்க்கின்றேன்
நெற்றிக் குங்குமம்
நிலைக்க வேண்டுகிறேன்
பள்ளி செல்லும் மாணவரின்
வெள்ளை ஆடையைக்கூட
வெறுக்கின்றேன்
வாடா மலர்களை வாஞ்சையுடன்
சூடுகிறேன்
இருந்தும்
நம்பிக்கை வேர்களை
பிடுங்கும் புயலாக
என்னுள் எழும் வினா
நான் சுமங்கலியா?
(2012 பெண் தொகுதி 17 தொகுதியிலிருந்து)
- தம்பிலுவில் ஜெகா -