தமிழில் ஹைக்கூ கவிதைகள் - 03


              

 இன்று தமிழில் தனிச் சிறப்பைப் பெற்றிருக்கிற ஹைக்கூ கவிதைகளை புதியதாய் படிக்க வந்த முதல் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள்  மட்டுமல்ல,ஏராளமான பெண்களும் எழுதி வருகிறார்கள். தமிழ் ஹைக்கூ கவிஞர்களில் முதன்மையானவரான கவிஞர் மித்ரா
போட்டுத் தந்த புதுத்தடத்தில், அவரின் அடியொற்றி பல நூறுப் பெண்களும் ஹைக்கூ கவிதைத் தளத்தில் கவனிப்பைக் கோரும் வண்ணம் சிறப்பாக பதிவு செய்கிறார்கள். இன்று தமிழில் முக்கிய பெண் கவிஞர்களாக அறியப்பட்டுள்ள அ.வெண்ணிலா, இளம்பிறை, கல்பனா, சுகிர்தராணி ஆகியோரும் ஆரம்ப  நாட்களில் ஹைக்கூ கவிதைகளை எழுதியுள்ளனர்.
        நிர்மலா சுரேஷ்,பரிமளமுத்து, மரியதெரசா, இ.பரிமளம், மாலதி ஹரீந்திரன், ஞானபாரதி, விஜயலட்சுமி மாசிலாமணி, அருளமுதம், ரேவதி இளையபாரதி, கரசூர் பத்மபாரதி, ஞா.தவப்ரியா, நா.சுப்புலெட்சுமி, த.ராஜேஸ்வரி, க.காயத்ரி, கு.அ.தமிழ்மொழி, யுகபாரதி, தமிழமுது, கு.தேன்மொழி என பலப்பல பெண் படைப்பாளிகள் தமிழ் ஹைக்கூவில் தனி முத்திரைப் பதித்து வருகிறார்கள்.
       தமிழ் ஹைக்கூவைப் பல்கலைக் கழக ஆய்வு செய்வதிலும் பெண்களே முன்நிற்கிறார்கள். மித்ரா, நிர்மலா சுரேஷ், பரிமளம் சுந்தர், இரா,தமிழரசி, கு.தேன்மொழி, நா.பிரதீபா, எஸ்.மல்லிகா ஆகியோரும் தமிழ் ஹைக்கூவை ஆய்வுகள் செய்து அதை நூலாகவும் கொடுத்து உள்ளனர்.
   2001-இல் ஈழத்திலிருந்து மல்லிகைப் பந்தல்வெளியீடாக பாலரஞ்சனி சர்மாவின் மனசின் பிடிக்குள்ஹைக்கூ நூல் வந்தது. புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் விக்னா பாக்கியநாதன் 2007-இல் அம்மா என் ஹைக்கூஎனும் நூலினைத் தந்துள்ளார். இதே ஆண்டில் முழுக்க பெண்களே பங்கேற்ற தமிழின் முதல் பெண் ஹைக்கூ  தொகுப்பு நூல் தென்றலின் சுவடுகள்’ ( தொகுப்பாளார்கள்:கன்னிக்கோயில் ராஜா, நிலாப்ரியன், தமிழ்மகாலி ) சிறப்பான முறையில் வெளிவந்து  பெண்களின் தனித்துவத்தை அடையாளப்படுத்தியது.


 தொடரும்.....


அன்புடன்
மு.முருகேஷ்