வங்கக்கடலலைகள் கிழக்கே வந்து வந்து தாலாட்ட, மங்கா களப்பொலிகள் மேற்கே மங்கலமாய்ச் சுரமூட்ட, பொங்கிவரும் விக்கினங்கள் எம்மை பங்கமுறச்செய்திடாமல் வடக்குத், தெற்கு வாயில்களில் காப்போனாய் கணபதி அமர்ந்திருக்க, எழில்பொங்கும் சிற்றூராய், தனித்தமிழர் வாழ் நிலமாய், முத்தமிழின் பிறப்பிடமாய் இன்றுவரை சிறப்புற்று விளங்கி வருகின்றது எங்கள் தம்பிலுவில், திருக்கோவில் பிரதேசமானது.
கி.பி.முதலாம் நூற்றாண்டில் கலிங்ககுலத்தைச் சேர்ந்த புவனேஜகஜபாகு மன்னனின் ஆட்சிக்காலத்தில் திருக்கோவில் பிரதேசம் நாகர்முனை என அழைக்கப்பட்டது. பின்பு கந்தனின் வேல் இங்கிருந்த வெண்நாவல் மரத்தில் தங்கியதால் இப்பிரதேசம் கந்தப்பாணந்துறை எனச்சிறப்புப் பெயர் பெற்றது.
இப்பகுதி முத்தமிழில் சரித்திரம் படைத்த பிரதேசமாகத் திகழ்ந்து வந்துள்ளது. இதன் பாடல், கவிதை வளர்ச்சிப் போக்கினை நாம் நோக்குகின்றபோது அவை மிகவும் பழைமை வாய்தவையாக புலப்படுகின்றது.
இப்பிரதேசத்தில் ஆரம்ப காலப் பகுதிகளில் வாய்மொழி ரீதியான இலக்கியங்களாக ஊஞ்சல் பாட்டு, எண்ணெய்ச்சிந்து, தாலாட்டு, காவடிப் பாடல்கள் போன்றன சமூக வழக்கில் இருந்துள்ளதாக செவியேறல் கதைகள் மூலம் அறியமுடிகின்றது.
அதனைத் தொடர்ந்து பதினாறாம் நூற்றாண்டு காலப்பகுதியில் கூத்துப்பாடல்கள் அண்ணாவியாரால் பாடப்பட்டுள்ளன. மட்டுமல்லாது மக்கள் தங்களின் பொழுது போக்கிற்காக மகாபாரதக் கதை, குருசேஷ்த்திரப் போர், இராமாயணக் கதை வசந்தன் கூத்து என்பனவும் எழுதப்பட்டு, மேடையேற்றப் பட்டதாகவும் அறியமுடிகின்றது. மேலும், வருடந்தோறும் கொம்பு முறிப்புச் சடங்குகளில் பாடப்படும் பாடல்கள் இயற்றப்பட்டு, குடிவழிகள் மூலம் வசைப்பாடல்களாகப் பாடப்பட்டுமுள்ளன.
குடிவழி வசைகள் சொல்லிப் பாடுவதாக இப்பாடல்கள் அமைந்துள்ளன. இதனை வடசேரிப்பாடல்கள், தென்சேரிப்பாடல்கள் என வகுத்தனர். இவையும் வாய்மொழிப்பாடல்களே.
1915இல் அறப்போர் அணித்தலைவர் அரிய நாயகம் அவர்களால் ஊஞ்சல் பாக்கள், சிந்துக்கள் பல பாடப்பட்டுள்ளன. எழுத்து ஆதாரமாக 1930ஆம் ஆண்டு திரு.வில்லியம்பிள்ளை அவர்களால் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி, சங்கமன்கண்டிப்பிள்ளையார், மங்கமாரி அம்மன் போன்ற தெய்வங்களுக்குப் பல பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.
1940ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தம்பிலுவிலைச் சேர்ந்த குஞ்சித்தம்பிப் பண்டிதர் என்பவர் தம்பிலுவில் கண்ணகை அம்மன் பஜனா அமிர்தம், சித்திரவேலாயுத சுவாமிகள் வருக்கமாலை ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார். இதே காலப்பகுதியில் திருக்கோவிலைச் சேர்ந்த சற்குணச்செட்டியார் மங்கமாரி அம்மன் மீது தோத்திரப்பாடல்களும் பாடினார்.
1942ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தம்பிலுவில் கட்டாடிக்கண்ணன் என்பவர் கண்ணகை அம்மன் மீது மழைக்காவியம் பாடினார். 1965இல் திருக்கோவிலைச் சேர்ந்த சங்கீத பூசணம் திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள் சித்திரவேலாயுத சுவாமிகள் மீது பல பாடல்களை எழுதியும், பாடியும் உள்ளார். அத்துடன் எமது பகுதிக்கு சங்கீத பாடத்தினை அறிமுகம் செய்வரும் அவரே.
1950இல் இப்பகுதியைச்சேர்ந்த திரு.வ.இராசையா என்பவர் திருக்கோவில் சித்திரவேலாயு சுவாமிகள் மீது சிறை மீண்ட படலம் எனும் நூலைப்பாடி சிறையில் இருந்த ஒருவரை விடுவித்தார்.
1960இல் திரு. சின்னத்தம்பி (ஆயுர்வேத பரிகாரி) பல நாட்டுக்கூத்துப் பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் குருசேஷ்திரப்போர், சத்தியவான் சாவித்திரி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவரைத்தொடர்ந்து இவரது மகனான முருகமூர்த்தி அவர்களும், இவரது பேரனான பராந்தகன் அவர்களும் இவரது பணியினைத் தொடர்ந்துள்ளனர்.
பராந்தகனால் பயிற்றுவிக்கப்பட்ட ‘சூரசம்காரம்’ எனும் நாட்டுக்கூத்தானது 2007இல் திரு வி.அருளம்பலம் அதிபரின் சேவைக்காலத்தில் சக்தி வித்தியாலய மாணவர்களால் ஆடப்பட்டு, தமிழ்மொழித்தினப்போட்டியில் மாகாண மட்டம் வரை சென்று வந்தமையும் சுட்டிக்காட்ட வல்லதே.
1962இல் கிருஷ்ணபிள்ளை (பூசாரி) என்பவர் காத்தவராயன், அரிச்சந்திரன், சூரன்வதை போன்ற கூத்துப்பாடல்களைப்பாடியுள்ளார்.
1970இல் திரு.ச.வன்னியசிங்கம் அவர்களால் தம்பிலுவில் சித்திவிநாயகர் மீது திருச்சதகம் பாடப்பட்டது. திருக்கோவில் திரு.எஸ்.பி.கனகசபாபதி (கல்கிதாசன்) அவர்களும் பல கவிதைகளை எழுதினார்.
1975ல் முல்லைவீரக்குட்டி அவர்கள் பல மரபுக்கவிதைகளை பத்திரிகைகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் எழுதினார். இதே காலப்பகுதியில் குறிஞ்சிவாணன், தம்பிலுவில்தயா, தம்பிலுவில் ஜெகா, திருமதி.குணவதி விநாயகமூர்த்தி, திருமதி.மகேஷ்வரி செல்வராசா போன்ற பல கவிஞர்கள் மரபுக்கவிதைகளை எழுதிவந்துள்ளமை அனைவரும் அறிந்ததே.
1980இல் ஆய்வார்வலர் நா.நவநாயகமூர்த்தி அவர்கள் வானொலிக்குப்பல மெல்லிசைப் பாடல்களை எழுதியுள்ளார். அத்தோடு வானொலி, தொலைக்காட்சிப்புகழ் நீதிராச சர்மா, கோவிலூர் செல்வராஜா போன்றோரும் பல பாடல்களை யாத்துப் பாடியுள்ளனர்.
1998இல் முல்லைவீரக்குட்டி, குறிஞ்சிவாணன், தம்பிலுவில்ஜெகா ஆகிய மூவரும் இணைந்து “இன்னும் விடியவில்லை” எனும் மூவர் கவிதைத் தொகுப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதே.
2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப்பிரதேசத்தில் புதுக்கவிதைத் துறையில் திருக்கோவில் கவியுவன் பங்களிப்புச் செய்துள்ளார். தற்போது நூறு கவிதைகளுக்கும் மேலாக எழுதி, வானொலியிலும், பத்திரிகைகளிலும்
வெளிவந்த கவிதைகளை கவிதைத்தொகுதியாக உருவாக்கம் செய்யக்காத்திருக்கும் திருக்கோவில் ஏ.எஸ்.மனோகார்த்திக் என புனைபெயரைச் சூடிக்கொண்ட புதுக்கவிஞன் சு.காத்திகேசு அவர்களின் கவிதைகளும் வரவேற்கத்தக்கதே.
இவ்வாறு இப்பிரதேச பாடல், கவிதை வளர்ச்சியானது நவீனத்துவம் அடைந்து, வௌ;வேறு வடிவங்களில் வளர்ச்சியுற்று வருகின்றமை பெருமைக்குரிய விடயமென்றே சொல்லலாம்.
திருமதி .ஜெகதீஸ்வரி நாதன்
(தம்பிலுவில் ஜெகா)
2011.09.23