கொஞ்சம் பொறுங்கள்....
எனக்காக ஒன்றும் அழத்தேவையில்லையென்று
அவர்களிடம் சொல்லுங்கள்
ஏனென்றால்....
இப்போது என்னால்
அவர்களின் கண்ணீரைத் துடைக்க முடியாது
எனது வார்த்தைகளின் அதிர்வெண்களும்
அவர்களின் கேள்தகவும்
சந்திக்க மறுக்கின்றன.
முடியாதென்று தெரிந்தும்
அவர்களின் கண்ணீரின் ஊற்றுக்களை
கட்டுப்படுத்தவே முற்படுகின்றேன்.
எனக்காக இத்தனை கண்களில் ஈரலிப்பா?
இல்லை இல்லை இருக்கவே முடியாது!
அதில் கொஞ்சம்
கானல் நீரும் கலந்துள்ளதை
நான் மட்டுமே அறிகிறேன்.
இப்போது எனது உலகமே வேறு
இங்கு கவிதைகளுக்கு மதிப்பில்லை
ஆனாலும் நான் மதிப்பவர்கள்
இங்கு நிறையப்பேர் இருக்கிறார்கள்
எனது பாட்டன்மார், எனது பாட்டிமார்
அப்துல் கலாம், பிரபாகரன்
பாரதி, வைரமுத்து, வாலி .....
என இன்னும் பலர்....
மதனை இப்போது
என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்
அவன் கண்களையும் இதயத்தையும் தவிர
மற்ற அனைத்தையும்
அக்கினிக்கு ஆகுதியாக்குங்கள்
அல்லது பூமிக்குப் புசிக்கக் கொடுங்கள்
ஏனென்றால்... அவையிரண்டும்
இன்னுமிருவருக்குச் சொந்தமாக
இத்தனை வருடங்கள்
காத்துக் கிடந்தவை.
அவர்களிடம்
அவற்றைச் சீக்கிரம் சேர்த்துவிடுங்கள்
அவர்களது கண்ணீரையாவது
இப்போது என்னால் துடைக்க முடியும்
அதற்குக் கைகள் தேவையில்லை
எனது கண்களே போதும்
நீங்கள் அழத் தேவையில்லை...
நான் அழியப்போவதுமில்லை.
- மதன் -