ஆழ்கடல் இந்து தாண்டி
அகதியாய் வந்து சேர்ந்து
நாளது மாத மாகி
நகர்ந்து - அது வருடமாகி,
காலது நூற்றாண்டின் மேல்
கண்மூடி விழிக்கும் போதும் ....
ஆலகால் விடத்தை மிஞ்சும்
அகோரநாள் அந்தோ : கண்முன்...!
நற்றோர்கள் சிறந்து வாழ்ந்து
நலங்கண்ட ஈழ மண்ணில்
மற்றோரால் கேடு நேர்ந்து
மாறிடும் நாளின் முன்னே
கற்றோரை அகிலம் ஏற்றும்
காட்சியை அங்கு கண்டோம்...
பெற்றோரும் உற்றார் கூடி
பெருமையாய் வாழ்ந்து நின்றோம...!
யாழுக்கு நூலைத் தந்து
யாவோரும் போற்றும் கிழக்கில்
வாழ்வாங்கு வாழ்ந்த சான்றோர்
வளங்கண்டு மகிழ்ந்த நாளும் -
யாழையே பேராய்க் கொண்ட
யாழ்ப்பாண மண்ணில் தோன்றி
நாளெலாம் சிறந்தோர் வாழ்ந்த
நாளையும் மறக்கப் போமோ...?
தமிழுக்குப் பெருமை சேர்த்தோர்
தந்திட்ட படைப்பாம் நூல்கள்
சிமிழாக எழுந்து நின்று
சிரித்தநூ லகத்துக் கோவில் -
அமிழ்தமாய் இனித்த தன்றோ,
ஆசிய மண்ணில் ஓங்கி...!
அக்கினி உண்ட தைய்யோ.....!
அரக்கரின் வெறியைத் தாங்கி...!
கொத்தான குண்டால் : மற்றும்
குறிபார்த்துச் சுட்டுக் கொல்லும்
துப்பாக்கிக் குண்டு பட்டுத்
துன்பத்தில் ஆழ்ந்த பூமி -
கற்பான பெண்கள் வாழ்வு,
காடையர் கரங்கள் பட்டு -
விற்காமல் அழுகிப் போன
வெறும்பழம் ஆன தன்றோ...!
இத்தனை செய்தார் வீட்டில்
இழவு இன்னும் ஏன்விழ வில்லை..?
செத்திட அழித்தார் எவரும்
சீரழிவு-ஏன் கண்டா ரில்லை...?
''உத்தமர்'' ஆகிப் போனார்
உதவிட ''அயலார்'' உள்ளார்...!
சத்தியம் செத்துப் போச்சு - ஈழம்
''சவக்குழி'' எனவே ஆச்சு...!
இதற்கொரு நாதி இல்லை..!
இடித்திட நீதி இல்லை...!
அதற்குள்ளே ''வரவு'' சொல்லி
அணக்கின்றார் உறவு எண்ணி...!
ஒழித்திட மீத மோரை-
உள்வரத் தூண்டு கின்றார் ...
ஒழிக்கும்பே ரரக்கர் தம்மை
ஊரைவிட் டோட்டி டாமல்...!
எப்படி வருதல் கூடும்...?
ஏற்குமா அரக்கர் கூடம்...?
''செப்படி'' பலரை நம்பி,
சிதைந்திட்ட தமிழர் சாதி...!
இப்புவி உளநாள் மட்டும்
இழித்தவாய் பிறவி யாகி,
தப்பாக வாழ்ந்தது போதும்...
''தக்கவழி'' தனைத்தே டட்டும்...!
நன்றியுடன்....
ஸ்ரீராம் விக்னேஷ்
(R.விக்னேஷ்வரன்)