நிம்மதி உலகம் நாம் காண்போம்.

கொலை களவு காமம்
கொண்ட சாதிமத பேதங்கள்
மலையெனவே வளர்ந்தின்று
மனிதம் இங்கு தேடலாகி
கடுகளவும் கருணையில்லாக்
கயவர் கூட்டம் மலிதலாகி
படுகுழியை நோக்கி பாலரெம்
பயணங்கள் தொடருதிங்கே!

யுத்தமும் யுக அனர்த்தமும்
நித்தம் இங்கு நிகழ்வாகி
வித்தகம் செய்ய வந்த
விளையும் நற் பயிரெல்லாம்
முளையிலே முடங்கலாகி
முகவரி தொலைத்து நிற்கும்
நிலையது இனியும் வேண்டாம்
நிம்மதியாக வாழ நேர் வழி நெய்வோம்

பிஞ்சுதனில் பிழைகள் நேரின்
எஞ்சுமோ எம்மவரினமிங்கு
நெஞ்சமதில் உரம் கொண்டு
நேர்வழியில் நாம் நிற்போம்
அஞ்சியஞ்சி வாழ்வதினால்
ஆகும் செயல் ஏதுமில்லை
மிஞ்சுமிந்த மழலைகளே
மிளிர்வர் மா மனிதராக

இச்சையது கொண்டிவர் வாழ
இனிய அன்பில்லம் நாமமைப்போம்
பச்சிளம் பராயத்தோரெல்லாம்
பள்ளி செல்ல வழி சமைப்போம்
அச்சமின்றி இவர்வாழ
அகிலமீதில் அநியாய செயலொழிப்போம்
எச்சம் அவர் வாழவெல்லோரும்
இறையாம் அன்பு வழி நிற்போம்

அஞ்சினிலே இவர் மனதில்
அன்பு அறம் பண்பொழுக்கம்
விஞ்சிட வகைதான் செய்து
விடமாம் தீய செயல் விரட்டி
பஞ்சதனில் தீ பரவுதல் போல்
பாசமதையிவர்கள் பிஞ்சு
நெஞ்சினிலே நாம் விதைத்து
நிம்மதி உலகம் நாம் காண்போம்.

-திரு.க.முரளிதரன்(வில்லூரான்)-