10வது ஆண்டு ஊழிக்கூத்தாடிய ஆழிப்பேரலை

அலையாடிக் கரையோடு விளையாடி நிதமும்
அழகோடு ஓயாமல் இசை பாடி நின்றாய்
கொலைமோகம் கொண்டெழுந்த அலைமலையாய் மோதி
குரூரமுடன் உயிர்குடித்தாய் கடற்தாயே ஏன் என்று கூறு?

ஆழிப் பேரலையாகி ஊழிக் குத்தாடி
ஆவென்றுன் வாய் பிளந்து மனிதவுயிர் குடித்தாய்
ஏழையோடு தன வந்தர் இனியரோடு தீயர்
இளமழலை முதியரோடு பெண்களையும் வனத்தாய்

உயிர் உடமை மாடிமனை பயிர்வகையும் அழித்தாய்
உதவாத உவர்நீரால் மண்வளமும் சிதை;தாய்
துயர்மேலும் துயரளித்த சுனாமியெனும் பேயால்
சோதனைமேல் சோதனையை பரிசளித்ததேனோ

கடல் அன்னை மடிமீதில் கண் மூடி மறைந்தோர்
கண்முன்னே சடலமென கரைமீது புரண்டோர்
இடராலே முடமாகி நடைப்பிணமாய் அலைவோர்
எண்ணற்றோர் எண்ணத்தால் ஏங்கி அழுகின்றோம்.

கொடும் கடலால் தடம்மழிந்து போனஎங்கள் உறவோர்
குரலோசை அலைபாடும் இசையோடு கேட்கும்
அடங்காத துயர்வந்தெம் இதயமதை தாக்கும்
அவர்ஆத்மா ஈடேற பிராத்தனைகள் செய்வோம்.


உறக்கமுற்ற உறவுகளே உங்கள்விழி திறக்க
உள்ளன்போடிறைஞ்சுகிறோம் உரியவழி பிறக்கும்
மற்காது உங்களையாம் எண்ணித் துதிசெய்வோம்
மணிணிலும் எண்ணஅலை கடல்போல நிலைக்கும்.

- நிலாதமிழின்தாசன் -