கவிதாயினி பிரபாகரன் வேதிகா தனது மனதில் இளையோடியுள்ள எண்ணக்கீறல்களை மிகவும் அழகாக மாலை தொடுத்து கவியாக தந்துள்ளார் நீங்கள் நினைக்கலாம் வேதிகா பெரியவர் என்று இல்லை இளம் வயது உயர்தரப்பரீட்சைக்கு படிக்கும் காலத்தில் இந்த கவிதை தொகுப்பு வெளிவந்தது.- 25-5-2015
தமிழை வளர்க்க வேண்டும் என்ற துணிவுடனும் தனது சிந்தனை திறனை வளர்க்க வேண்டும் என்ற உணர்வுடன் பல படைப்புக்களை பத்திரிகைகளிலும் மின் இதழ்களிலும் படைத்துக்கொண்டு வரும் இளம் படைப்பாளி என்றுதான் சொல்ல முடியும்.
அதுவும் ஈழத்தில் பிறந்து வளர்ந்து குருதி துவைந்த நிலத்தில் பிறந்த மங்கை அல்லவா. அதுதான் வன்னி மண்ணில்.. பிறந்த அறிவு மங்கை. இனி புத்தகம் பற்றி நாம் நோக்கினால்.
தனது கண்ணாடிப்பூக்கள் என்ற கவிதை நூலில் எல்லாமாக 52 கவிதைகள் 64 பக்கங்கள் கொண்டு பிரசவம் கண்டுள்ளது. அழகிய அட்டைப்படத்துடன் மிளிர்கிறது.
தனது முதலாவது கவிதையில் தான் பிறந்து வளர்ந்த ஊர்பற்றிமிக அற்புதமாக அவையடக்கமாக சொல்லியுள்ளார் கவிதை படிக்கும் போது என் மனதை அந்த ஊர்ப்பக்கம் ஈர்த்து விட்டது.. அதனால்தான் அந்த ஊரில் உள்ள கவிஞர்கள் எழுத்தாளர்களை பார்க்க வேண்டும் என்னும் ஆசை பிறக்கிறது. அந்த வகையில் தனது ஊர்பற்றி சொல்லிய வரிகளை நாம் நோக்கினால்.
தூங்கும் பனித்துளிகளை
கிள்ளியெழுப்ப வெட்கப்படுவான்
கிழக்கு வானின் சூரியன்
பொங்கும் இன்பமே எங்கும்….
இந்த வரிகளை படிக்கும் போது எப்படிப்பட்ட ஊர் என்பதை புரிந்துகொள்லலாம் நாம்.
உதிர்ந்த இறகுகளாக. என்ற தலைப்பில் எழுதிய கவிதையை படித்த போது. எத்தனை இளம் பிஞ்சுகள் எத்தனை உறவுகள் சொந்தங்களையும் பெற்ற சொந்தங்களையும் இழந்து தவிக்கின்றார்கள் ஈழத்தின் யுத்தத்தால்.
எத்தனையோ உறவுகள் வசதி வாய்ப்புடன் வாழ்கிறார்கள் அவர்களுக்காவது நாங்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற உணர்வை அற்புதமாக பறைசாற்றியுள்ளார் அதில் எடுத்தியம்பிய வரியாக.
உதிர்ந்த இறகுகளோடு
உதிரம் வடிக்கும்
உறவுக்காய் எங்கள்
இதயக் கதவுகளை.
இனிமையோடு திறப்போம்
இந்த வரிகளை படிக்கும் ஒவ்வொரு உள்ளங்களும் நிச்சயம் இதயக்கதவுகளை திறக்கும் என்பதில் ஐயமில்லை. உணர்ச்சி மிக்க வரிகளாக சொல்லியுள்ளார்
அது மட்டுமா வயது முதிந்த முதியோர்கள் பற்றியும் சின்னக் கீறுக்கலாக எடுத்துக்காட்டிய விதம் என்னை ஒரு தடவை சிந்திக்க வைத்தது. அந்த வலி மிக்க வரிதான் இங்கு
நன்றியுள்ள ஜீவன்-உன்னை
ஊட்டி வளர்க்கும் அன்னைக்காய்
ஆட்டி வைப்பாய் வாலை-ஆனால்
ஆக்கிவைத்தார் முதியோர் இல்லங்கள்.
.இந்த வரிகளின் கருத்தை நாம் ஒரு தடவை என்ன பல தடவை சிந்திக்க வைக்கிறது.
சொல்வார்கள் பெண்கள் மலர் போன்றது உதிர்ந்தால் உதிர்ந்ததுதான்.இப்படிப்பட்ட பெண்களின் வாழ்வில் காம பசி கொண்ட காம வெறியர்களின் கைவரிசை பற்றி தினசரிப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பெண்களின் வண்கொடுமை பற்றி செய்திகள் வந்த வண்ணமே இருக்கிறது. அந்த உணர்வை வெளிப்படுத்தும் கவிதைதான் மலர்களின் ஏக்கம் என்ற தலைப்பில் உள்ள கவிதை அதுவும் பெண் எப்படிப்பட்டவள் என்றதை சொல்லி விட்டு இறுதில் அவள் காமபிசாசுகளின் கையில் அகப்பட்டு இறக்கிறாள் அவளின் துயரத்தை சொல்லும் வரிகள்படிப்பவர்களை விக்கவைக்கும்.
நீ நடந்து செல்லும் போது.
பாதங்களும் பஞ்சாகவென்றே.
பூத்திருக்கின்றன பூக்கள்.
ஆனால் நீ காமப் பிசாசுகளின்
கையில் அகப்பட்டு இறுதி கிரியையில்
கண்ணீர் சொரிய வைத்தாய் –அவைகளை.
அது மட்டுமா. காதல் கவிதை எழுதாத கவிஞர்கள் இல்லை என்றே சொல்லலாம் அதில் வேதிகா விதி விலக்கா.
வருவாயா என்ற தலைப்பில் உள்ள கவிதையை படித்த போது. காதல் இரசம் சொட்டுகிறது.
மடிந்து போன மாயக் கனவுகளோடும்
மறக்கதுடிக்கும் வடுக்களோடும்
மறைந்து போன மனச் சிரிப்பில்
மன்னவனே உன் முகம் மட்டும்
புன்னகையுன் என்முன்னே.
பூத்தது போல உணர்ந்தேன்.
உன் புதிரான புன்னகை கண்டு
என் இதயத்தில் பலஅர்த்தங்கள் தேடி
தோற்றுப் போய் இருக்கிறேன்.
தேற்ற வருவாயா..
இந்த வரிகளில் காதல் ஏக்கத்தை பிரிவை துள்ளியமாக இரனையுடன் அற்புதமாக சொல்லி யுள்ளார்.
சமூகத்தை நல்வழிப்படுத்தும் கருத்துக்கள் நிறைந்த கவிதைகளும்.எழுதியுள்ளார். படிப்பவர்களை ஒரு கணம் சிந்திக்கவைக்கிறது…
எழுதினால் எழுதிக்கொண்டே போகலாம் தனது கண்ணாடிப்பூக்கள் என்ற கவிதை நூலில் உள்ளே பிரசவம் செய்த கவிதைகள் ஒவ்வொன்றும் படிப்பவர்களை நிச்சயம் கவரும் என்பதில் ஐயமில்லை…..
பிரபாகரன் வேதிகா வளர்ந்து வரும் ஒரு படைப்பாளி. தனது கன்னிக்கவிதை பிரசவத்தை நிச்சயம் வேண்டி படியுங்கள்.. நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் ஒவ்வொரு கவிதையிலும் சொல்லிய அர்த்தங்களை. இன்னும் பல நூல்கள் களம் கண்டு தன்னையும் எம் தமிழ் மொழியையும்வளர்க்க உரமுட்டும் கவிதாயினி பிரபாகரன் வேதிகா அவர்களின் நூல்பற்றி படித்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். வாழ்க வளர்க…..
வாழட்டும் வையகம்
வளரட்டும் எம் தமிழ் மொழி.
நூலின் விலை – 158 /=ரூபாய்(இலங்கை)
அச்சுப்பதிப்பகம்-விஜய் அச்சுப்பதிப்பகம்-வவுனியா.இலங்கை.
தொடர்புக்கு-+94242225799/+94779009491
ISBN.-978-955-42298-0-8
விமர்சனம் வழங்கியவர்
கவிஞர் திரு. த. ரூபன்.
மலேசியா.