பாண்டிருப்பில் நடைபெற்ற வாசிப்போம் வளர்ப்போம் இலக்கிய கருத்தாடல்

பாண்டிருப்பு அகரம் சமூக அமையத்தின்  வாசிப்போம் வளர்ப்போம் இலக்கியக் கருத்தாடல் நிகழ்வு பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்திச்சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

 அகரம் செ.துஜியந்தனின் ஒழுங்கமைப்பில் ஈழத்தின் புகழ்பூத்த மூத்தகவிஞர் மு.சடாட்சரன் தலைமையில் இவ் வாசிப்போம் வளர்ப்போம் இலக்கிய நிகழ்வு பி.ப.4 மணிக்கு இறைவணக்கத்துடனும்   பாண்டிருப்பு ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.சபாரெத்தினம் குருக்களின் ஆசியுரையுடன் ஆரம்பமாகியது.

   இதில் புலம்பெயர் எழுத்தாளர் சட்டத்தரணி பாடுமீன் .ஸ்ரீகந்தராசா (அவுஸ்ரேலியா), எழுத்தாளர் எஸ்.அரசரெத்தினம், யோகாதிலகம் கே. சந்திரலிங்கம் ஆகியோர் தங்களைக்கவர்ந்த இலக்கியப் படைப்புக்கள் பற்றியும் தாங்கள் எழுத்துத்துறைக்குள் பிரவேசித்தமை தொடர்பிலும் இலக்கியசுவையுடன் சபையில்பகிர்ந்து கொண்டனர்.

மு. சடாட்சரன்
தலைமை தாங்கிய கவிஞர் மு. சடாட்சரன் “தற்காலத்தில் வாசிப்பு எங்களுக்குப் போதாது. அதனைக்கூட்டிக்கொள்ள நாம் பல்வேறு முயற்சிகளை நடைமுறைப்படுத்தவேண்டும். வாசிப்பின் ஊடாகவே பூரண மனிதனாகலாம்,  வாசிப்பின் ஊடாகவே அறிவுடைய சமுகத்தை உருவாக்கலாம், வாசிப்பின் ஊடாகவே அறிவுசார் உலகத்தைப் புரிந்து அதனோடு சேர்ந்துபோகலாம் தற்கால இலக்கியப் போக்குகளை அறிந்து ரசிக்கவும் சிறந்த நவீன இலக்கியங்களைப் படைக்கவும் வாசிப்பு மிகமிக அவசியம். வாசிப்போம் தமிழ் இலக்கியத்தை வளர்ப்போம். தமிழ் கலைகலாசாரத்தை வளர்ப்போம் தமிழை வளர்ப்போம்  நாமும் வளர்வோம். வாசிப்போம் வளர்ப்போம் ” எனக்கூறி இலக்கிய நிகழ்வை ஆரம்பித்துவைக்கின்றேன். என்றார். 

சட்டத்தரணி பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராஜா 
புலம்பெயர் எழுத்தாளர் சட்டத்தரணி பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராஜா பேசும்போது.
“தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் சங்கம்வளர்த்து பாதுகாத்தவர்கள் தமிழர்கள். ஈழத்தில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்ப்பணியை எம்மவர்கள் திறம்படச்செய்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறான இலக்கிய நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் எமது அடுத்தசந்ததியினர் மத்தியில் தரமான தமிழ் இலக்கியங்களை படைக்கவும் பாதுகாக்கவும் வழி ஏற்படுத்தப்படும். கிழக்கு மண் தலைசிறந்த படைப்பளிகளை உருவாக்கிய மண் என்னை முற்போக்கு எழுத்தாளர் எஸ்.பொ வின்எழுத்துக்கள் மிகவும் கவர்ந்தவை
தற்கால தமிழ் இலக்கியத்தினை உலக இக்கியப்பந்தலில் ஒய்யாரமாக அமரவைத்த ஈழத்தமிழ் இலக்கியத்தின் இமயம் எஸ்.பொ. அவர் தீர்க்கதரிசனம் மிக்க ஒரு எழுத்தாளர். இறுதியாக ஒரு ஆமத்துருவின் காதல் என்ற கதையை எழுதுவதற்கு இருந்தவர் அதற்குள் காலன் அவரைப்பறித்துக்கொண்டான். தமிழ் மொழியைப் பொறுத்தவரை நிறைய நூல்கள் வெளிவருகின்றன அவையெல்லாம் தரமானவையா? என்றகேள்வி எழுகின்றது. காலத்தைக்கடந்த இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும். அது ஈழத்து எழுத்தாளர்களினாலும்  எதிர்கால சமூதாயத்தாலும் நிச்சயம் முடியும். இப்பொழுது ஊடகங்களும் எழுதுபவர்களும் தமிழ்மொழியை சரியாக எழுதவோ உச்சரிக்கவோ தெரியாதவர்களாக இருக்கின்றனர். சரியென்று எண்ணிக்கொண்டு தவறான சொற்பிரயோகங்களை தமிழ்மொழியை பயன்படுத்துகின்றனர். இதற்குக் காரணம் தமிழ்மொழிப்பயிற்ச்சி மக்களிடையே மிகக்குறைவாக இருப்பதும் ஆங்கிலமொழியின் மோகமாகவும் இருக்கலாம்.எல்லோரும் நூல்வெளியிடுவது போல் நாமும் வெளியிட வேண்டும் என நினைக்கக்கூடாது. தரமான நூல்களைப் படைக்கவேண்டும். ஒரு நூலை வெளியிட்டாலும் அது இலக்கிய உலகில் அதிர்வையும் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் இப்பொழுது தாங்கள் எழுதுகின்ற கவிதைகள் கதைகள் எல்லாம் கவிதைகள்தானா?  கதைகள்தானா? என்று தெரியாமல் பணம் இருந்தால் நூல்வெளியிடலாம் என்கிற நிலையிருக்கின்றது. எல்லோரும் நூல் வெளியிடலாம். முதலில் அவர்கள் தமிழ்மொழியில் பயிற்ச்சி பெறவேண்டும். மொழிப்பயிற்ச்சி மிக முக்கியமானது. தமிழ்மொழியில் சரிவர எழுதவேண்டும். பல உன்னதமான இலக்கியங்களை யார்த்தமொழி. பல மொழிகளை உருவாக்கிய மொழி. அப்படிப்பட்ட மூத்தமொழியை, வளமான மொழியை தாய்மொழியாகக் கொண்டிருக்கும் தமிழர்கள் அம்மொழியை மேலும் வளர்ப்பதற்கு தங்களாலான முயற்சியைச் செய்யவேண்டும். முன்பு ஈழத்தமிழ் அறிஞர்கள் இந்தியாவிற்குச் சென்று இந்திய அறிஞர்களுக்கு கூட தமிழ் கற்ப்பித்திருக்கின்றார்கள் அவர்களில் முத்தமிழ் வித்தகர் சுவாமிவிபுலானந்தர் குறிப்பிடத்தக்கவர். ஈழத்தமிழ் மக்களாகிய நாம் மொழியின் பெருமையை கட்டிக்காக்கவேண்டும்.
இளம் சந்ததியைப் பொறுத்தவரை வாசிப்புப்பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அவர்களிடம் மட்டுமல்ல எல்லோரிடமும் குறைந்து விட்டது. தமிழ் மொழியை பல்கலைக்கழகம் சென்றுதான் கற்கவேண்டியதல்ல நல்ல நூல்களை வாசிக்கப்பழகிக் கொண்டால் தமிழ்மொழி கைவரப்பெறும் எவ்வளவுக்கு வாசிக்கின்றோமோ அவ்வளவிற்கு தமிழ்மொழியில் வளத்தைக்கூட்டும். பிள்ளைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை பெற்றோர்களும் தூண்டவேண்டும்.
இப்போது இவ்வாறான வாசிப்புபோம் வளர்ப்போம்  இலக்கிய நிகழ்வினை செய்கின்ற அகரம்  அமைப்பின் உன்னதமான  முயற்ச்சிகள் பாராட்டத்தக்கன. இதில் பல எழுத்தாளர்களையும் இணைத்துக்கொண்டு பாடசாலை மாணவர்களுக்கும் வாசிப்புபழக்கத்தை கூட்டுவதற்கான முயற்சிகளை இந்த அமைப்பு செய்யவேண்டும்”  என்றார்.

எழுத்தாளர் எஸ்.அரசரெத்தினம் பேசும் போது.
எஸ்.அரசரெத்தினம்
“தரமான படைப்புக்கள்  மக்கள் மத்தியில் என்றும் பேசப்படும் . சமூகத்தோடு ஒன்றித்து எழுதவேண்டும். எழுதுவது பெரியவேலையல்ல. வாசிப்பு இருந்தால் எழுதத்தூண்டும். எம் சமூகத்திலே ஏராளமான கதைக்கான கரு தாராளமாக இருக்கின்றது.  வலிந்து எழுதுவது எழுத்தல்ல இது வசப்படவேண்டும். கல்முனைப் பிரதேசம் பல கலை இலக்கியவாதிகளை கண்டபிரதேசம். கவிஞர்களான நீலாவணன்,  பாண்டியூரான், சண்முகம் சிவலிங்கம் சடாட்சரன், பிரபல எழுத்தாளர் உமாவரதராஜன் போன்ற உலகறிந்தவர்களை தந்த மண். இம்மண்ணில் இவ்வாறான இலக்கிய நிகழ்வுகள் அன்று தொடக்கம் இன்று வரை தொடர்வது வரவேற்க்கத்தக்கது.
இன்று நவீன சாதனங்களின் வருகையினால் வாசிப்பு குறைந்துவிட்டது. குறிப்பாக இளம் பிள்ளைகளின் நேரத்தை கைத்தொலைபேசிகள் ஆக்கிரமித்துள்ளது. இதில் தேவையில்லாத விடயங்களைத் தேடி தமது எதிர்காலத்தை வீணடித்துக்கொண்டிருக்கின்றனர். பிள்ளைகள் கெட்டுப்போவதற்கு மறைமுகமாக பெற்றோர்களே காரணமாக இருக்கின்றனர். பிள்ளை வளர்ப்பு என்பது அடுத்த சந்ததிக்கு ஒரு சவாலாக இருக்கப்போகிறது.
இதுவரை 5 நூல்களை வெளியிட்டுள்ளேன். எனது சாம்பல்பறவை நாவலுக்கு கிழக்கு மாகாணவிருதும் கிடைத்திருந்தது. இதுமட்டுமல்ல தேசியரீதியிலும் விருதுகள் கிடைத்துள்ளன. தமிழ் எழுத்தாளர்கள் சத்தமில்லாது பல சாதனைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களது எழுத்துப்பணிகள், இலக்கியப்பணிகள் ஊடகங்களில் அதிகமாக வெளிவருவது குறைவாகவேயுள்ளது. சிலர் பேரளவில் நூல் ஒன்றை வெளியிட்டு ஒரு கடை முதலாளிக்கு அல்லது அரசியல்வாதிக்கு முதற்பிரதியை வழங்குகின்றனர். வாசிப்போடு எழுத்தோடு தொடர்பில்லாத ஒருவருக்கு நூல் ஒன்றை வழங்குவதால் எவ்விதபிரயோசனமுமில்லை. எழுதப்படுகின்ற எமது நூலகள் வாசிக்கப்படவேண்டும். அதுவே ஒரு எழுத்தாளனுக்கு ஆத்ம திருப்தியைக்கொடுக்கும்”  என்றார்.

யோகாதிலகம் கே.சந்திரலிங்கம் பேசும்போது.

யோகாதிலகம் கே.சந்திரலிங்கம்
“ அகரம் அமைப்பின் வாசிப்போம் வளர்ப்போம் இலக்கியச் சந்திப்பு தொடர் நிகழ்வாக நடைபெற்றுவருவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இலக்கிய உலகில் தரமான ஆன்மீக நூல்களும் வெளிவந்த வண்ணமுள்ளன. பக்தி இலக்கியங்களும் எமது எழுத்தாளர்களால் எமுதப்பட வேண்டும். இப்போது எவரும் பக்தி இலக்கியங்களை எழுதுவதில்லை. இன்றைய நவீன விஞ்ஞான தொழில்நூட்ப யுகத்தில் தறிகெட்டு செல்லும் இளையசமூதாயத்தை நல்வழிப்படுத்த ஆன்மீக பக்தி இலக்கியங்களும் படைக்கப்படவேண்டும்”  என்றார்.


கல்முனைப்பிரதேசத்தில் மிக நீண்டகாலத்திற்குப்பின்னர் தமிழ்படைப்பாளிகள் இலக்கிய ஆர்வலர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர். இதில் மட்டக்களப்பு தேசியகல்விக்கல்லூரி உபபீடாதிபதி கு.துரைராஜசிங்கம்,   முன்னாள் மாவட்டகாணிப்பதிவாளர்-எழுத்தாளர் உமாபதி, கவிதை-சிறுகதைப் படைப்பாளிகளான செ.திவாகரன், வை.சுந்தரராஜா, சிவகுருநாதன், கி.கிருபைராஜா, த.சிவனேசன் , மாணவமீட்பு பேரவை தலைவர் எஸ்.கணேஸ், மாணவர் உளவளத்துணை ஆலோசகர் கா.சாந்தகுமார், மத்தியஸ்தசபை உறுப்பினர் இ.சந்திரசேகரம், ஒய்வு நிலை அதிபர்காளான இ.இராசரெத்தினம் வே.தங்கவேல்  ஓய்வுநிலை சமூகசேவை உத்தியோகஸ்தர் க.வேதநாயகம் மருந்தாளர் எஸ்.விஸ்ணுதாசன், இலக்கிய ஆர்வலர்கள் செ.காந்தரூபன், க.கமலதாசன், வ.டினேஸ், கே.தில்லைநாதன், ம.கிரிசாந், தி.லிங்கன்கோணநாயகம், சீ.கோபாலபிள்ளை, கிராமசேவையாளர் எஸ்.அருள்ராஜா, ம.கலாயினி, து.அமுதா, கே.சந்திராதேவி, ச.நிர்மலா, சாந்தி, பி.ஜெயா, உட்பட மாணவர்கள் பலர் இவ் வாசிப்போம் வளர்ப்போம் இலக்கியக் கருத்தாடல் நிகழ்வில் கலந்து கொண்டனர். எதிர்வரும் மாதம் இச்சந்திப்பு கல்முனையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


























செ.துஜியந்தன்