இலங்கை திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் வேல்ஸ் சினிமா பட்டறையினால் வருடம் தோறும் சிறந்த படைப்பாளிகளை இனம் கண்டு விருது வழங்கும் நிகழ்வும் பாலுமகேந்திரா திரைப்பட விழாவும் இன்று 2015.11.21ஆம் திகதி மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மாலை 5 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
வேல்ஸ் சினிமா பட்டறையின் இலங்கை இயக்குனர் எஸ் . கிருஷ்ணா அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வுக்கு வேல்ஸ் சினிமா பட்டறையின் நிறுவனர், நடிகர் வேல் மற்றும் தென் இந்திய திரைப்பட இயக்குனர் சுரேஷ் லக்ஷ்மணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்வில் திரைப்படம், குறும்படம், நாடகம், காணொளிப்பாடல் பிரிவுகளில் திறமையை வெளிப்படுத்திய இலங்கை கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
அந்த வகையில் விஜய் ஆண்டனியின் ‘நான்’ திரைப்படத்தில் “தப்பெல்லாம் தப்பேயில்லை” என்ற பாடலை எழுதி தமிழ் சினிமாவில் தடம் பதித்த பிரபல இலங்கை கவிஞரும் திரைப்பட பாடலாசிரியரும் வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளருமான, பொத்துவில் அஸ்மின் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையில் ‘அமரகாவியம்’ திரைப்படத்தில் பாடலை எழுதியிருக்கும் அஸ்மின் இயக்குனரும் நடிகருமான ‘காதல்’ சுகுமாரின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘சும்மாவே ஆடுவோம்’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல் எழுதியுள்ளார்.
‘புறம்போக்கு’ திரைப்பட இசையமைப்பாளர் வர்சன், இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானிடம் பணியாற்றிய இசையமைப்பாளர் தாஜ்நூர், மற்றும் மிதூன் ஈஸ்வர் ஆகியோரின் இசையிலும் பாடல்கள் எழுதியிருக்கும் அஸ்மின்
இயக்குனரும் நடிகருமான அனூப்குமாரின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘தேன்ல ஊர்ன மிளகாய்’ திரைப்படத்தின் முழுப்பாடலையும் எழுதியுள்ளார். ‘தேன்ல ஊர்ன மிளகாய்’ படத்தின் தலைப்பே இவருடைய பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் இலங்கையின் நாமத்தை மிளிரச்செய்து மிக வேகமாக வளர்ந்து வரும் வரும் நம் மண்ணின் மைந்தன் கவிஞர் அஸ்மினுக்கு நாமும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
நன்றி : tamilmithran.com